கருப்பு வெள்ளை மேகங்கள் நடுவே
தோன்றும் அந்த விழியின் மழை
பள்ளம் நிறைய திரண்டு நிற்கும்
இமைகள் என்னும் அணைகள் தாண்டும்
கன்னம் எனும் நிலத்தில் பாய்ந்து
உதட்டில் இறங்கும் உணர்வின் வெள்ளம்
ஒவ்வொரு மழையும் கதை சொல்லும்
மனதின் பாரம்தனை அடித்துச் சென்று
கவலை எல்லாம் அது வெல்லும்
நாவில் கலந்து உயிருள் கலக்கும்
ஏங்கும் மனதின் தாகம் தீர்க்கும்
இன்பம் துன்பம் இரண்டிற்கும்
கண்ணீர் மட்டும் ஒன்றுதான்
எனவே இரண்டையும் ஒன்றாக
கருதி வாழ்வில் முன்னேறு,
என்னும் உயர்ந்த கருத்தினை
உணர்த்தி காற்றில் கரைந்திடும்.