Thursday, February 16, 2023

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல 

தமிழும் இங்கே திணறுதடி 

உன் இதழை மெல்ல வருடிச்சென்ற 

காற்றும் வழியை மறக்குதடி ..


நீ சோம்பல் முறிக்கும் அழகைக்காண 

சூரியன் தினமும்  உதிக்குதடி 

உன் கூந்தல் வாசம் நுகரத்தானே 

பூக்கள் யாவும் மலருதடி ..


குளித்து நிற்கும் உன்னைப் பார்த்து

கண்ணாடி வெட்கி  நெளியுதடி 

பழித்துச் சொல்ல ஏதும் இல்லை 

குணமோ சொக்கத் தங்கமடி ..


இயற்கை யாவும் தானம் கேட்கும் 

உன் அழகில் கொஞ்சம் தா என்று 

அடியேன் நானும் அடைய வந்தேன் 

உன் நெஞ்சில் தஞ்சம், வா இன்று ..

Wednesday, November 25, 2020

இறை

 கதையும் தெரியா வேடமும் புரியா

வாழ்க்கை எனும் நாடகம் சரியா?


பழுதாய்ப் போன மனதால் உனையே 

முழுதாய் அறிய முயன்றேன் இறையே.. 


முற்றும் துறவா நிலையில் உன்னை 

நாடிய என்னை சேர்ப்பாய் கரையே..

Sunday, October 14, 2018

ஆற்றின் பாடம்

இமயத்தில் உயரப் பிறந்ததால் தானா
கங்கையே நீ புனிதச் சின்னமோ?
கீழே தாழப் பிறந்ததால் தானா
காவேரியே நீ கலவரச் சின்னமோ?


ஆற்றின் அழகு அது
தோன்றும் இடம் பொறுத்து
அவ்வாற்றின் பெருமை அது
ஓடும் தடம் பொறுத்து

பிறப்பும் வேறு பாதையும் வேறு
இறுதியில் கலக்கும் கடலில் பாரு
பிறப்பின் வர்ணம் பொருட்டே இல்லை
செயலால் யாதும் ஓரிடம் சேரும்

ஆறு ணர்த்தும் இம்மெய் உணரேல்
மனிதா நீ
இம்மை விடுத்து எழுமையும் உயரேல்.

Sunday, September 18, 2016

இந்த  வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று வழக்கம் போல் கோவிலுக்கு சென்றேன்.
இதற்கு முன்பு கண்டிராத புது விஷயங்களை கண்டு வியந்தேன். இல்லை இல்லை. வருந்தினேன்.

அன்று கோவிலுக்குள் நின்றதில் 90 சதவீதம் பேர் சாமி கும்பிடுவதை விட தனது செல் போனில் அலங்கரித்த விநாயகர் சிலையை படம் பிடிப்பதிலே குறியாய் இருந்தனர்.

இவர்களாவது பரவாயில்லை.. எனக்கு முன் நின்ற ஒருவன் என்னை நோக்கி திரும்பி அவன் செல் போனை என்னை நோக்கி திருப்பி ஒரு க்ளிக் செய்தான். நான் குழம்பினேன், யார் என்றே தெரியாத ஒருவன் என்னை ஏன் படம் பிடிக்க வேண்டும் என்று. 2-3 வினாடிகளில் கழித்துதான் புரிந்தது அவன் க்ளிக் செய்தது என்னை அல்ல, அங்கே அலங்கரித்திருந்த விநாயகர் சிலையை. தற்போதைய நாகரிக வார்த்தைகளில் சொன்னால் "Selfie with Statue" என்றே சொல்லலாம்.

இன்று பெரும்பாலான மக்கள் கோவில் வழிபாட்டின் முறை தெரியாமல், எதற்காக கோவிலுக்கு செல்கிறோம் என்ற காரணம் கூட தெரியாமல்  கோவிலுக்கு வருவது தான் மிகப் பெரிய வருத்தம்.  காரணம் தெரியக் கூடத் தேவையில்லை, ஆனால் கோவில் வழிபாட்டின் முறைகளையாவது பின்பற்றி இருக்கலாம்.

நம் தாத்தா பாட்டி அப்பா அம்மா அனைவரும் கோவிலுக்குள் வந்தால் சத்தமாக கூட பேச மாட்டார்கள். வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் மனதை ஒரு நிலைப்படுத்தி பிரார்த்தனை செய்வார்கள். கடவுள் அருளோ அல்லது அறிவியல் காரணமோ, ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் மனம் அமைதிப்படும்.

நாத்திகன் கோவிலுக்குள் செல்வதில்லை. அவன் தனது 'கடவுள் இல்லை என்ற' நம்பிக்கையிலாவது உறுதியாய் இருக்கிறான்.. அவன் நம்பிக்கையை அவன் அலட்சியம் செய்வதில்லை. ஆனால் ஆத்திகம் பேசும் மக்கள் இன்று கோவிலுக்குள் வந்து 'Selfie' எடுப்பதிலே கவனம் இருந்தால் அவர்கள் கோவில் வர அவசியம் தான் என்ன? மனம் ஒரு நிலைப் படாது, அவர் பக்தியும் கேள்விக் குறியாய் ஆகி விடுகிறது, மற்றவர்களுக்கும் இடைஞ்சல். கோவில் சிலையையும் காட்சிப் பொருளாய் ஆக்கி விடுகிறான்.

இப்படி பக்தர் என்ற பெயரில் வழிபாட்டை அலட்சியம் செய்யும் இவர்களை விட நாத்திகனாக இருப்பவர்கள் எவ்வளவோ மேல் என்று தோன்றியது.


Saturday, October 11, 2014

அக்கா

தவழ்ந்து சென்ற நான்               
தவறி விழுந் ததும்                    
தரையைக் குற்றம் சொன்ன    
தங்கத் தோழி நீ.                          

பிறந்த நாள் முதல்                     
பிரியாது எனைத் தாங்கும்     
அக்கா எனும் பெயருடைய
நீயும் ஓர் அன்னைதான்.  

Monday, May 19, 2014

நான் கடவுள் மீது வைத்திருக்கும்
நம்பிக்கையை விட
நீ என் மீது வைத்திருக்கும்
நம்பிக்கையே பெரிது;
அதுதான் தாயே
நான் முன்னேறக் காரணம்.
-அன்புடன்
உன் மகன்

Monday, August 5, 2013

பிறந்த நாள்

என்னைப் பெற்றெடுத்து
அன்பூட்டிய தாய்க்கும்
அறிவூட்டிய தந்தைக்கும்;
வழி காட்டிய குருவுக்கும்
வழி நடத்திய சிவனுக்கும்;
அக்கறையுள்ள அக்காவிற்கும்
அரட்டிவிடும் அண்ணனுக்கும்;
சண்டையிடும் தங்கைக்கும்
சரிபாதியான தம்பிக்கும்;
தோள் கொடுக்கும் தோழனுக்கும்
தோளில் சாயும் தோழிக்கும்;
கண்ணடித்த காதலிக்கும் (added just for rhyming)
கல்லடித்த எதிரிக்கும்;
என் 27 வருட வாழ்க்கையிலே
இனிய நினைவுகளை இழைத்ததற்கு
இதயம் கனிந்த நன்றி!!

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...